கேலாங் பகுதியில் அதிரடி சோதனை
கேலாங் (Geylang) வட்டாரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிக்கும் நோக்கில் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து கூட்டு அதிரடிச் சோதனை நடத்தியுள்ளன.
இந்தச் சோதனையில் பிடோக் வட்டாரக் காவல்துறை, குற்றப் புலனாய்வுத் துறை, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம், சுங்கத் துறை, நிலப் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.
சோதனையின் முடிவில் மொத்தம் 43 பேர் சிக்கினர். அவர்களில் 13 பேர் ஆண்கள், 30 பேர் பெண்கள். அவர்கள் 22 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. அனைவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கேலாங் பகுதியில் உள்ள 6 ஹோட்டல்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற 50 வயது ஆடவரும் பிடிபட்டார்.
உபி ரோடு (Ubi Road) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இணையவழி சூதாட்ட நடவடிக்கை ஒன்று முறியடிக்கப்பட்டது. இதன் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்; மேலும் 2 பேர் விசாரிக்கப்படுகின்றனர். சுமார் 4,000 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கப் பணமும் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தவிர, கேலாங் பகுதியில் பாலியல் குற்றங்களுடன் தொடர்புடைய சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 16,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டன. Etomidate ரசாயனம் கலந்த மின்-சிகரெட்டுகள் மற்றும் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளும் சிக்கின.
மேலும், முறையான உரிமம் இன்றி வேலை செய்த வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சட்டத்தை மீறும் எவராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாதம் ரூ.2,44,000 வரை சம்பளம் பெற இந்த PASS-ல் உடனே விண்ணப்பிக்கலாம்
