பொது ஒழுங்குச் சட்ட மீறல்
பொது ஒழுங்குச் சட்டத்தை மீறியதாக இருவர் மீது நாளை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.
61 வயதுடைய இந்த இருவரும், இரண்டு தனித்தனி சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். அந்தச் சம்பவங்கள் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 22ஆம் தேதி, ஒரு சமயச் சங்கம் புதிய இடத்துக்கு மாற்றப்படுவதை முன்னிட்டு ஒருவர் பொதுமக்களை ஒன்று திரட்டி, ஊர்வலமாகச் செல்ல ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற ஊர்வலங்கள் ஆறு இடங்களில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதற்கான உரிமம் அவர் பெறவில்லை.
மற்றொரு சம்பவம் அக்டோபர் 24ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. அதில் மற்றொரு ஆடவர் இரண்டு ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு பொதுக் கூட்டம் நடத்த மட்டுமே உரிமம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஊர்வலமாகச் செல்லக்கூடாது என காவல்துறை முன்கூட்டியே எச்சரித்தும், அவர் அதை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பொதுக் கூட்டம் நடத்தவும், ஊர்வலமாகச் செல்லவும் உரிய அனுமதி அவசியம். இதை மீறுவோருக்கு அதிகபட்சமாக 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
